வருமான வரியாகக் கட்ட வேண்டிய பணம்... வலி தெரியாமல் சேர்க்கும் வழிகள்..!
BHARATHIDASAN S
இன்றைய தேதியில் பலரும், ‘‘சம்பளம் போதவில்லை; அதனால் தான் கடன் வாங்குகிறோம்’’ என்கிறார்கள். இவர்களின் இந்தச் செயலுக்குக் காரணம், அவர்கள் சம்பளப் பணத்தை எப்படி பிரித்து செலவு செய்ய வேண்டும் எனத் தெரியாமல் இருப்பதே ஆகும்.
வருமான வரிப் பணத்தை சேமிக்கும் எளிய வழி...
ஒருவர் அவரின் சம்பளப் பணத்தை வருமான வரி போக உள்ள தொகையை மூன்றாகப் பிரித்து வைத்துக் கொண்டு செலவு செய்யத் தொடங்க வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா?
வருமான வரி போக மீதித் தொகை எனச் சொல்லக் காரணம், ஒருவர் ஆண்டு தோறும் வருமான வரி கட்டிதான் ஆக வேண்டும். அதை நிதி ஆண்டு ஆரம்பம் முதல் பிரித்துக் கட்டி வர வில்லை எனில், நிதி ஆண்டு இறுதியில் மொத்தமாக வருமான வரியைக் கட்டி தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும்.
மொத்தமாகக் கட்டுவதால் ஏற்படும் சிக்கல்...
நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி வரைக்கு மான 12 மாதங்கள் ஆகும்.பலரும் வருமான வரியை ஆண்டு இறுதியில் கடைசி இரு மாதங்களான பிப்ரவரி, மார்ச்சில் மொத்தமாகக் கட்டுகிறார்கள். அப்போது அவர்கள் சம்பளப் பணத்தை வருமான வரியாகக் கட்டி விட்டு, செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடு கிறார்கள்; தனிநபர் கடன் வாங்கி, நகையை அடமானம் வைத்து செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள். அல்லது கிரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்து கிறார்கள். விளைவு, இந்தக் கடன்களை சரியாக அடைக்க முடியாமல் அதிக வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
வருமான வரிச் சலுகைகள்...
உதாரணமாக, 40 வயதுள்ள ஒருவரின் நிதி ஆண்டு சம்பளம் ரூ.10 லட்சம். அதாவது, மாதச் சம்பளம் (Gross salary) ரூ.83,335. அவருக்கு பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் சந்தா (EPF), ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியம், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு என எல்லாவற்றுக்கும் சேர்ந்து ரூ.85,000 வருமான வரிக் கழிவு கிடைக்கிறது.
தவிர, அவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டு பீரிமிய மாக கட்டும் தொகை ரூ.15,000-ஆக உள்ளது. ஆக மொத்தம், அவருக்கு வரிச் சலுகை ரூ.1 லட்சம், நிலைக் கழிவு ரூ.50,000 இரண்டையும் கழித்தால் ரூ.8.5 லட்சத்துக்கு அவர் வருமான வரியைக் கட்ட வேண்டும்.
வரியைக் கணக்கிடுவது எப்படி?
60 வயதுக்கு உட்பட்ட ஒருவர் நிதி ஆண்டில் கிடைக்கும் ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரியைக் கட்ட வேண்டாம். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைக்குமான தொகைக்கு 5% வருமான வரி கட்ட வேண்டும். அதாவது, ரூ.12,500 வருமான வரியாக இருக்கும். ரூ.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சத்துக்கு அதாவது, ரூ.3.5 லட்சத்துக்கு 20% என்பது ரூ.70,000 வருமான வரி ஆகும். ஆக மொத்தம், இவர் ரூ.82,500 வருமான வரி கட்ட வேண்டும்.
இந்த வரி மீது 4% கல்வி மற்றும் ஆரோக்கிய தீர்வை ரூ.3,300 என மொத்தம் ரூ.85,800. இந்தத் தொகையை 12-ஆல் வகுத்தால் மாதம்தோறும் ரூ.7,150 வருமான வரியாகக் கட்ட வேண்டி வரும். இந்த ரூ.7,150 தொகையை மாதச் சம்பளமான 83,335-ல் கழித்துவிட்டு மீதியைதான் செலவு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதாவது, மாதம் 76,185 ரூபாயை மட்டுமே செலவு செய்ய திட்டமிட வேண்டும்.
வரி கட்டுவதற்கு எந்தத் தொகையும் ஒதுக்கீடு செய்யாமல், எல்லாப் பணத்தையும் செலவு செய்து விட்டு, கடைசி மூன்று மாத காலத்தில் மொத்தமாக செலுத்தும்போது, பிற செலவுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்கிதான் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க எளிய வழி, வரியாகக் கட்ட வேண்டிய பணத்தை மாதம்தோறும் சேர்ப்பதுதான்.
வரிப் பணத்தை மட்டும்தான் இப்படிச் சேர்க்க வேண்டும் என்பதில்லை. ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம், குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கான கட்டணம் எனப் பலவற்றுக்கும் தேவைப்படும் பணத்தை இப்படிச் சேர்க்கலாம்.
இப்படி சேர்க்க நினைக்கும் பணத்தை எதில் சேர்க்கலாம் என்று கேட்கிறீர்களா?
ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் எனில் வங்கி ஆர்.டி திட்டம் சிறந்ததாக இருக்கும். அஞ்சலக ஆர்.டி திட்டத்தையும் தேர்வு செய்யலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர் எனில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்!
https://www.vikatan.com/business/finance/guidance-for-tax-saving-2
No comments:
Post a Comment